மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை: அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல்

மதுரை: தமிழ்நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியதன் மூலம், ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார். மதுரையில் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருந்தகம் (இஎஸ்ஐ) பழங்காநத்தம், மணி நகரத்தில் உள்ளது. இவற்றில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கை கழுவும் இடம் மோசமாக இருந்தது. அதை அவரே சுத்தப்படுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்து முறைகேடு செய்தவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.

ஒப்பந்த தொழிலாளர்கள் குறைவான சம்பளம் குறித்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 67 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்கிற சொல்லை போக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய கனவு திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் கூறியுள்ளார். இதுவரை தமிழ்நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று அதன் மூலமாக ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வித்தியாசம் பாராமல் வேலைவாய்ப்பு முகாமை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.