ஹிமாச்சல் தேர்தலில் பாஜக தோல்வி: முதல்வர் ஜெய்ராம் தாகூர் ராஜினாமா!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பாஜக இழந்துள்ள நிலையில், முதலமைச்சர் பதவியை, ஜெய்ராம் தாகூர் ராஜினாமா செய்துள்ளார்.

68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளிடையே போட்டி நிலவியது. தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக – காங்கிரஸ் இடையே தான் இரு முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், இன்று காலை 8 மணி அளவில், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே, பாஜக – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சரிக்கு சமமான அளவில் முன்னிலையில் இருந்தன. ஒரு கட்டத்தில் பாஜக முன்னேறிச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி தக்க பதிலடி கொடுத்து விஸ்வரூபம் எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, சோபிக்கவில்லை.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தகவலின்படி, மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை தாண்டி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும், காங்கிரஸ் கட்சி, 19 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத் தேர்தல் தோல்வி, பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாஜக தோல்வியைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை, ஜெய்ராம் தாகூர் ராஜினாமா செய்துள்ளார். தலைநகர் சிம்லாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஜெய்ராம் தாகூர் வழங்கினார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தேன். ஹிமாச்சலப் பிரதேச மாநில மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். சில விஷயங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும். டெல்லி பாஜக மேலிடத்தில் இருந்து அழைப்பு வந்தால் செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.