புதுடெல்லி: நடந்து முடிந்த குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. குஜராத்தில் பாஜக 156 இடங்களைக் கைப்பற்றி, தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அங்கு காங்கிரஸ் 17 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
அதேநேரம், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி இமாச்சலில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி: குஜராத்தின் அற்புதமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து உணர்ச்சிகளில் மூழ்கியுள்ளேன். வளர்ச்சிக்கான அரசியலை மக்கள் ஆசீர்வதித்துள்ளனர். குஜராத்தின் மக்கள் சக்திக்கு நான் தலைவணங்குகிறேன். நாட்டின் வளர்ச்சி மீது பொதுமக்கள் வைத்துள்ள வலிமையான நம்பிக்கையின் வெளிப்பாடாக குஜராத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. நாட்டிற்கு சவாலான நிலை வரும்போதெல்லாம் மக்கள் பாஜக மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.
ராகுல் காந்தி: தீர்க்கமான வெற்றியைத் தந்த இமாச்சல் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இமாச்சல் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம் என மீண்டும் உறுதியளிக்கிறேன். காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்பால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. குஜராத் மக்களின் உத்தரவை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். நாட்டின் லட்சியங்களுக்காகவும், மாநில மக்களின் உரிமைகளுக்காகவும் மறுசீரமைத்து கடுமையாக உழைத்து தொடர்ந்து போராடுவோம்.
அரவிந்த் கெஜ்ரிவால்: 10 ஆண்டுகளுக்கு முன் ஆம் ஆத்மி சிறிய கட்சி. தற்போது தேசியக் கட்சியாக உருவெடுத்துள்ளது. டெல்லி, பஞ்சாப் என 2 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. ஒரு கட்சி தேசிய கட்சியாக இருக்க, குறைந்தது 4 மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அந்தவகையில் இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, கடந்த சில மாதங்களுக்கு முன் கோவாவில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. தற்போது குஜராத் தேர்தல் மூலமாக தேசியக் கட்சியாக உயர்ந்துள்ளது. குஜராத் மக்கள்தான் தேசியக் கட்சியாக ஆம் ஆத்மி மாறியதற்கு காரணம், அவர்களுக்கு எங்கள் நன்றி. பாஜகவின் கோட்டையான குஜராத்தில் 13% வாக்குகள் பெற்று கோட்டைக்குள் நுழைந்துள்ளோம்.
அமித் ஷா: வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை முன்னிறுத்திய பாஜகவுக்கு எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பேராதரவை மக்கள் வழங்கியுள்ளனர். இந்த வெற்றி பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பட்ட மக்களும் பாஜக மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. குஜராத் எப்போதும் வரலாறு படைக்கும்.
ராஜ்நாத் சிங்: குஜராத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவான அலை வீசியுள்ளது. அதன் காரணமாகவே நாங்கள் தற்போது புதிய சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி மீது குஜராத் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.