தொடரும் உருவ கேலி…. நொந்துபோன நடிகை திவ்யபாரதி – இன்ஸ்டாவில் காரமான போஸ்ட்

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சதிஷ் செல்வக்குமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் பேச்சிலர். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படத்தில் நடித்த நாயகி திவ்யபாரதி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதுதான் அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவர் சில படங்களில் நடித்துவருகின்றார். கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட திவ்யபாரதி அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவேற்றுவதும் வழக்கம். அந்தப் படங்களில் சில சமயம் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும். அந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவதும் உண்டு.

அதேசமயம் சிலர் அவரது உருவத்தை வைத்து விமர்சிப்பதும் உண்டு. தற்போது அதுகுறித்து திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். திவ்யபாரதி தனது பதிவில், “சமீப நாட்களில், எனது உடல் வடிவம் போலியானது, நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் அல்லது என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்று சிலர் கூறுகிறார்கள்.  அந்த நாட்களில், நான் “Fanta Bottle Structure”, “எலும்புக்கூடு” போன்று மிகவும் பயங்கரமான கருத்துக்களை என் உடல் அமைப்பை வைத்து கூறினார்கள்.

எனது கல்லூரி நாட்களில் எனது ஸ்லாம் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை இணைத்துள்ளேன், அங்கு எனது வகுப்புத் தோழி ஒருவர் எனது உடல் அமைப்பைக் கேலி செய்து வரைந்ததை நீங்கள் பார்க்கலாம் இவை அனைத்தும் என்னைக் கடுமையாகப் பாதித்து, என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது; மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது. அது எந்த வகையிலும் என் தவறு அல்ல; என் இடுப்பு எலும்பு அமைப்பு இயற்கையில் பரந்ததாக உள்ளது. பின்னர் 2015இல், நான் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்து எனது மாடலிங் பயணத்தைத் தொடங்கினேன். நான் பதிவிடும் ஒவ்வொரு புதிய படத்திலும், குறிப்பாக என் உடல்வாகுக்காக நான் பாராட்டுகளைப் பெற ஆரம்பித்தேன். 

நான் ஜிம்மிற்குள் நுழையவே இல்லை என்றாலும் அவர்களில் பலர் எனது வொர்க்அவுட்டைக் கேட்கத் தொடங்கினர். எனது உடல் அமைப்பை பலரும் ரசித்ததை அறிந்து வியந்தேன். அனைத்திற்கும் எப்போதும் வெறுப்பவர்களும், ரசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதையும், நம் குறைகளை நாம் எப்படிப் பறைசாற்றுகிறோம் என்ற சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது என்பதையும் உணர்ந்தபோது, அது எனக்கு ஒரு பேரறிவின் தருணமாக இருந்தது.
 
அன்பான சக பெண்களே, விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையாகவும் அன்பாகவும் இருப்போம்” என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.