வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மாண்டஸ் புயலாக மாறியிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் மாண்டஸ் புயலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.

நீலகிரியில் தற்போது பனிக்காலம் என்றாலும், இன்று காலை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடுமையான பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. கடும் பனி மூட்டம் காரணமாக பகல் பொழுதே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சில மீட்டர் தொலைவைக்கூட தெளிவாகக் காணமுடியாத வானிலை வருவதால், மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதனால் வாகனஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகனங்களை மெதுவாக இயக்கி வருகின்றனர். இந்த தொடர் சாரல் மழையால் ஊட்டியில் வழக்கத்துக்கு மாறான கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால், மலைகாய்கறி அறுவடையிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. நீலகிரியில் பெரிய அளவிலான மழை எதிர்பார்க்கப்படாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை.

இன்று காலையில் நிலவிய தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் பங்கேற்க இருந்த அரசு நிகழ்வு ஒன்றும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதே போல மழை நீடித்து வந்தால் மண் சரிவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. பெரும்பாலான சுற்றுலா தளங்கள் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. கடுமையான குளிரைச் சமாளிக்க பகல் வேளையிலேயே மக்கள் தீமூட்டி குளிரைப் போக்கி வருகின்றனர்.