வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே, மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையை கடக்க உள்ளது.
இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், புயல் அடித்தாலும் கூட சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போதிலும், சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை, சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை இரு மார்க்கங்களில் இயக்கப்படும்.
பரங்கிமலையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை இரு மார்க்கங்களிலும் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும். வழக்கமாக இரவு 11 மணி வரையிலும், அதிகாலை 5 மணி முதலும் மெட்ரோ ரயில் சேவை துவங்கும் நிலையில் குறிப்பிட்ட இந்த நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
newstm.in