சென்னை: மாண்டஸ் புயலின் வெளிவட்டப் பகுதி கரையை கடக்கத் தொடங்கியது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் தற்போது அளித்த பேட்டியில், “மாண்டஸ் புயல் தற்போது மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே சுமார் 60 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. அதனை சுற்றிய காற்றின் வேகம் 70 – 80 கிமீ வேகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது. 14 கிமீ வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் மணிக்கு 65 முதல் 70 கிமீ வேகத்தில், சமயங்களில் 80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை காலை வரை காற்று வீசக்கூடும். அதன்பிறகு படிப்படியாக மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்தில் குறையக்கூடும்.
தற்போது சென்னை, காட்டுப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டத்தில் திரூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் தரைக்காற்றாக மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.
மேலும், தற்போது மாண்டஸ் புயலின் வெளிவட்டப் பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் தொடங்கியது. 9.30 மணிக்கு புயலின் வெளிபுறப்பகுதி கரையை கடக்கத் தொடங்கி மையப்பகுதி 11.30 மணிக்கு கரையை கடக்கும். பின்புற வெளிப்பகுதி அதிகாலையில் கரையை கடக்கும். இதனால் தற்போது மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.