தமிழகம் முழுவதும் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள குடியிருப்பு பகுதிகளை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டதை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டபாணி கோயில் தெரு, சிவராஜ் பேட்டை, போஸ்கோ நகர், உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ள குடியிருப்புகளை காலி செய்ய கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன் காரணமாக திருப்பத்தூர் திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமப்புகளை அகற்றியது. தண்டபாணி கோவில் தெருவில் சுமார் 80 வருட காலமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. இந்த நிலையில் அதிகாரிகளால் ஆக்கிரமப்பொறி அகற்றக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் அப்பகுதி மக்கள் அரசு சார்பில் மாற்று இடம் கொடுத்த பின்பு காலி செய்ய அனுமதி வேண்டும் கோரிக்கை வைத்து வைத்தனர். அரசு சார்பில் நேற்று வெளியிட்ட விளம்பரத்தை கண்டு, ‘மாற்று இடம் கொடுக்கும் முன்பே வீட்டை காலி செய்ய வேண்டும் என கூறுகிறார்கள்.’ என்று கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
அப்போது ஆவேசப்பட்டா பகுதி மக்கள், ‘தமிழக அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும், எங்களுக்கு இந்த இடத்தை காலி செய்து விட்டால் வேறு இடமில்லை. எங்களுடைய பிணத்தை தாண்டி தான் எங்களுடைய வீட்டை இடிக்க முடியும்.
விஷம் வாங்கி கொடுத்து எங்களை கொன்று விட்ட பின்பு எங்களது இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என வயிற்றில் அடித்துக் கொண்டு கதறினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.