மூணாறை மீண்டும் மிரட்டும் காட்டு யானை: கடைகள், காரை அடித்து நொறுக்கி துவம்சம்

மூணாறு: மூணாறு பகுதிகளில் காட்டுயானை படையப்பாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கார், கடைகளை அடித்து நொறுக்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் காட்டுயானையின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. மூணாறு பகுதியில் படையப்பா என்ற காட்டுயானை மக்களிடையே மிகவும் பிரபலமானது.

மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஹாயாக உலா வருகிறது. குறிப்பாக மாட்டுப்பட்டி, எக்கோ பாயின்ட், பாலாறு உள்ளிட்ட இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து, ஏராளமான சாலையோர கடைகளை அடித்து நொறுக்குவதை வழக்கமாக வைத்துள்ளது. இதனால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை விரட்டி ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மாட்டுபட்டியில்  படகு சவாரி மையம் அருகே சாலையில் வலம் வந்த படையப்பா யானை, அங்கிருந்த ஜான்சன்,  சுகன் ஆகியோரின் கடைகளை அடித்து நொறுக்கியது.

மேலும் அன்னாசி பழம்,  மக்காச்சோளம் ஆகியவற்றை தின்று தீர்த்தது. இதனால் மூணாறு – வட்டவடை சாலையில்  ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், நெற்றிமேடு  டிவிஷனில் வீட்டின் முன் நிறத்தியிருந்த ராமன் என்பவருக்குச் சொந்தமான காரை சேதப்படுத்தியது. சாலையில் நிற்கும் யானையை, வாகனங்களில் பின் தொடர்ந்து வீடியோ எடுப்பது, தண்ணீர் பாட்டில்கள் கொண்டு எறிவது, வாகனத்தின் ஹார்ன் சத்தத்தை அதிகளவில் எழுப்புவது போன்ற செயல்களை சுற்றுலாப்பயணிகள் செய்யக்கூடாது என வன அலுவலர்கள் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.