சென்னை: இந்தியாவின் பொருளாதாரம் வரும் 2047-ம் ஆண்டுக்குள்8 முதல் 9 சதவீதம் வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், சென்னை பொருளாதார கல்வி நிறுவனத்தின் தலைவருமான சி.ரங்கராஜன் தெரிவித்தார்.
சென்னை சுங்கத் துறை அலுவலகம் சார்பில், சுங்கத் துறை சட்டம் 1962 இயற்றப்பட்டதன் 60-ம் ஆண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
சென்னை மண்டல சுங்கத் துறை தலைமை ஆணையர் எம்விஎஸ்சவுத்ரி வரவேற்புரை ஆற்றினார். அவர் கூறும்போது, “பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் சுங்கத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவேவர்த்தகம் மற்றும் வரி வசூலிக்கும் முறை நம் நாட்டில் இருந்தது.இங்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பாகவே வரி வசூலிக்கும் முறை இருந்துள்ளது.
திறமையான வரி நிர்வாகம்: சுங்கத் துறை சட்டம் இயற்றப்பட்ட 60 ஆண்டுகளைக் கொண்டாடும் இத்தருணத்தில், நம் நாட்டில் திறமையான வரி நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளது. போதைப் பொருள், தங்கம், விலங்குகள், வன உயிரினங்கள் கடத்தல் ஆகியவற்றை கண்டுபிடித்து திறம்பட தடுத்து வருகிறது சுங்கத் துறை.
பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்காக உலக நாடுகளுடன் இந்தியா இணைந்து பணியாற்றி வருகிறது. விலங்குகளைக் கடத்துவது ஒட்டுமொத்த உலகுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சுங்கத் துறை இத்தகைய கடத்தல்களை தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்” என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், சென்னை பொருளாதார கல்வி நிறுவனத்தின் தலைவருமான சி.ரங்கராஜன் பேசியதாவது: நாட்டின் வருவாய் வளர்ச்சிக்கு சுங்கத் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. 1990-ம் ஆண்டு மத்திய அரசின் மொத்த வருவாயில் 36 சதவீதம் சுங்கத் துறை மூலம் கிடைத்தது. பொருளாதாரத்தையும் தாண்டி நாட்டில் உள்ள தாவரங்கள்,விலங்குகளை காப்பதையும் சுங்கத்துறை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்.
பயணிகளிடம் கனிவு: வாடிக்கையாளர்களுடன் சுங்கத் துறை நல்லுறவை வளர்க்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் விமானத்தில் அசதியாக வந்து இறங்கும் பயணிகளிடத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
நாட்டில் வரி குறைக்கப்பட்ட பிறகு வருமான வரி செலுத்துவது 96 சதவீதம் அதிகரித்தது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை உள்நாட்டில் தயாரிக்க வேண்டும். இறக்குமதியை அனுமதிக்க வேண்டும். அதேசமயம், இறக்குமதியை முழு அளவில் அனுமதிக்காமல் கட்டுப்படுத்த வேண்டும்.
கடந்த 1970 முதல் 1980-ம் ஆண்டு வரை உலக அளவிலான ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு இரண்டரை சதவீதமாக இருந்தது. இறக்குமதி வரி கொள்கை காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதனால், 1990-ம்ஆண்டு இந்தியா கடும் பொருளாதார சிக்கலை சந்தித்தது.
பின்னர் எடுக்கப்பட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 1990-ம் ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.75 சதவீதமாக உயர்ந்தது. தற்போது இது 11.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டு உலகமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம்8 முதல் 9 சதவீதம் வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய கலால், சுங்கத் துறை வாரியத்தின் முன்னாள் தலைவர் அஜித் குமார், உறுப்பினர் ரமா மேத்யூ ஆகியோர் பேசினர்.