டெல்லி: எல்லைப்பிரச்சனையை பொறுத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் எல்லையில் சீன படைகள் அத்துமீறலில் ஈடுபட்டது. சீன படைகளை இந்திய படைகள் தடுத்த போது இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் சில வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்திய வான்வெளி பரப்பிலும் சீன போர் விமானங்கள் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. காஷ்மீரை தொடர்ந்து அருணாச்சலப்பிரதேச எல்லையிலும் சீன ராணுவம் அத்துமீறி இருப்பது பாதுகாப்புக்கு அச்ச்சுறுத்தல் என குற்றச்சாட்டு எழுந்தது. அருணாச்சல பிரதேசத்தில் இந்திய – சீன படைகள் மோதல் குறித்து விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது.
இந்நிலையில் சீன ராணுவத்தின் அத்துமீறல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். கடந்த 9ம் தேதி அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவும் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்திய ராணுவம் மிகுந்த வீரத்துடன் சீன ராணுவ வீரர்களை தடுத்தது. இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்; மோதலில் இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. இந்தியர்கள் காயமடைந்தபோதும், சீன வீரர்களை அவர்களது முகாமுக்கு திருப்பியனுப்பி பதிலடி தந்தனர். இந்தியாவின் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்றும் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.