உதயநிதியின் அறை இது தான்: கில்லியாக வேலையை முடித்த ஊழியர்கள்!

நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நாளை காலை 9.30 மணிக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமானம் செய்து வைக்கிறார். அன்றைய தினம் உதயநிதி தலைமைச் செயலகத்துக்கு சென்று அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பொறுப்புகளை ஏற்பார்.

இதையொட்டி திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், உடன்பிறப்புகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி, “என்னை பொறுத்தவரையில் முதலிலேயே அமைச்சராக ஆக்கியிருக்க வேண்டியவர். ஏனென்றால் கடந்த தேர்தலில் அந்த அளவிற்கு பணியாற்றியவர். இளைஞர்கள், மாணவர்களின் எல்லா விதமான எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற துடிதுடிப்புடன் இருக்கக் கூடியவர். அவருக்கு எந்த துறையை கொடுக்க வேண்டும் என்பதை தமிழக முதல்வர்

நாளை அறிவிப்பார்” என்று கூறினார்.

பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள நானூறு பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற போது கொரோனா நெருக்கடி காரணமாக கட்சியினர் உற்சாகமாக கொண்டாட முடியாமல் போனது. ஆனால் இம்முறை பதவியேற்பு நிகழ்வு சென்னையில் நடைபெற்றாலும் தமிழகம் முழுக்க இனிப்பு வழங்கி கொண்டாட திமுக உடன்பிறப்புகள் தயாராகி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளமாட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

உதயநிதிக்காக தலைமைச் செயலகத்தில் ஒதுக்கப்பட உள்ள அறையில் கடந்த இரு தினங்களாக வேலைகள் நடைபெற்று வந்தன. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதிக்காக தயாராகியுள்ள அறையில் அவரது இருக்கைக்கு பின்புறம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.