கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இல்லையா? வழக்கு தள்ளுபடி!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கவுதம சித்தார்த்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த மார்ச் மாதம், 7,382 குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றது. இதுசம்பந்தமான அறிவிப்பாணையில் கலப்பு மணம் புரிந்தோருக்கான முன்னுரிமை வழங்குவது குறித்த எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்காத அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல் அரசின் உத்தரவுகளை மீறிய செயல் மட்டுமல்லாமல், சமூக நீதிக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்பட பிற தேர்வு நடைமுறைகளிலும் கலப்புமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், 7382 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரேஷ் உபாத்யாய் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு மனம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களில் கலப்பு மணம் புதிந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்றும் இது அரசின் கொள்கை முடிவு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கலப்பு மணம் புரிந்தவர் அல்ல என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு அடிப்படை தகுதி இல்லை எனவும், பணி விதிகள் சம்பந்தமாக பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.