தமிழகத்தில் இயங்கி வரும் ஏழு ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளுக்கான மத்திய அரசின் நிதி உதவி, விரைவில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் தொலைதுார பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளை மத்திய அரசு 1997 – 98ல் உருவாக்கியது.இத்திட்டத்தின்படி, 50 சதவீத்துக்கும் அதிகமாகவோ அல்லது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏகலைவா பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பள்ளிக்கும் 30 லட்சம் ரூபாய் உதவித் தொகையை மத்திய அரசு அளிக்கிறது.
இதன் பின் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி அளிக்கிறது. அதற்கு மேல் செலவாகும் தொகையை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.இத்திட்டத்தின் கீழ், 740 ஏகலைவா பள்ளிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக 3.50 லட்சம் பழங்குடி இன மாணவர்கள் பயன் அடைவர். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலத்தில், முதல் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளி 1997ல் துவக்கப்பட்டது.
இதன் பின், சேலம், நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார், நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்தடுத்து ஆறு பள்ளிகள் துவக்கப்பட்டன.மத்திய அரசின் விதிமுறைப்படி இந்த பள்ளிகள், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட வேண்டும். ஆனால், தமிழகம், பீஹார், மேற்கு வங்கத்தில் உள்ள ஏகலைவா பள்ளிகள் மாநில அரசின் பாட திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அவற்றை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் மாற்றக்கோரி, மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சகம் பலமுறை அறிவுறுத்தியும், இந்த மூன்று மாநில அரசுகள் மறுத்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஏழு ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கு, மத்திய அரசு அளித்து வரும் உதவி த் தொகை விரைவில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.- நமது சிறப்பு நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement