`பிரச்னையை தீர்க்க உதவாவிடில் சுட்டுக் கொலைசெய்வேன்!' – சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மும்பை காம்தேவியில் வசித்து வருகிறார். கடந்த சில நாள்களாக மர்ம நபர் ஒருவர் சரத் பவார் வீட்டுக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்து வந்தான். “என்னுடைய குடும்பப் பிரச்னையை தீர்த்து வைக்கவில்லையெனில், குறிப்பாக ஓடிப்போன மனைவியை என்னுடன் சேர்த்து வைக்கவில்லையெனில் கொலைசெய்துவிடுவேன்” என்று சரத் பவாருக்கு மிரட்டல் விடுத்துக்கொண்டே இருந்தான். மேலும், “மும்பைக்கு வந்து நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்வேன்” என்று மிரட்டினான். தொடர்ச்சியாக மிரட்டல் போன் வந்து கொண்டே இருந்ததால் இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காம்தேவி போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில் பீகாரிலிருந்து மிரட்டல் போன் வந்திருந்தது தெரியவந்தது.

உடனே தனிப்படை போலீஸார் பீகார் விரைந்து சென்று சரத் பவாருக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபரைக் கைதுசெய்து அழைத்து வந்தனர். அவருடைய பெயர் நரேந்திர குமார் சோனி என்று தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புனேயில் வசித்து வந்தது தெரியவந்தது. புனேயில் வசித்தபோது கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இதனால் அவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர குமாரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

இப்போது அவருடைய மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நரேந்திர குமார் தனது குடும்பப் பிரச்னை தீர சரத் பவார் உதவவில்லை என்ற கோபத்தில் அவருக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.