கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு சென்றது. இந்த பேருந்து திட்டக்குடியை அடுத்துள்ள ஆவினங்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திடீரென சாலையின் குறுக்கே திரும்பியுள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதாமல் இருப்பதற்காக வலது புறத்தில் திருப்பியுள்ளார். இதில் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் பேருந்து இறங்கியது
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் எந்த விதமான காயமும் இல்லாமல் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை வேறொரு பேருந்தில் மாற்றி அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் பள்ளத்தில் இறங்கிய தனியார் பேருந்து பொக்லின் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. இதன் காரணமாக திட்டக்குடி – விருத்தாசலம் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.