கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளின் ஆரம்ப கல்வி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி குழந்தைகளின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் வகையில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு “இல்லம் தேடி கல்வி” திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு தமிழக முழுவதும் தன்னார்வலர்களால் செயல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “இல்லம் தேடி கல்வி திட்டம் இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. பெரிய அளவில் பலன் தரவில்லை என்று சி.என்.சி.ஆர்.டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 20% மாணவர்களால் மட்டுமே தமிழ்ச் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது என்ற அறிக்கை அதிர்ச்சியாக இருக்கிறது. இதன் மூலம் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.