ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மீண்டும் வேட்டையைத் தொடங்கிய ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்ட, இரு கும்கி யானைகளை வனத்துறை வரவழைத்துள்ளது. இது தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 13-ம் தேதி வெளியான விரிவான செய்தியைத் தொடர்ந்து வனத்துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், விளைநிலங்களில் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, “கருப்பன்” என பெயரிடப்பட்ட ஒற்றை யானை விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்துவதோடு, குடியிருப்புகளையும் தாக்கத் தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே, இந்த யானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில், “தாளவாடியில் மீண்டும் வேட்டையைத் தொடங்கிய கருப்பன் யானை: வனத்துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை” என்ற தலைப்பில் கடந்த 13-ம் தேதி “இந்து தமிழ் திசை” நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இந்தச் செய்தியில், கடந்த ஜூலை மாதம், “கருப்பன்” யானையை விரட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது போல், மீண்டும் கும்கி யானைகளை வரவழைத்து, ஒற்றை யானையை அடர்வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து, சின்னத்தம்பி, ராமு ஆகிய இரண்டு கும்கி யானைகளை தாளவாடிக்கு வனத்துறையினர் வரவழைத்துள்ளனர். இன்று முதல் “கருப்பன்” யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, கும்கி யானைகளைக் கொண்டு, அதனை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கைகள் தொடரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“கருப்பன்” எனும் ஒற்றை யானையால் பெரும் அச்சத்தில் ஆழ்ந்திருந்த தாளவாடி சுற்றுவட்டார மக்கள், வனத்துறையின் இந்த நடவடிக்கையால் நிம்மதி அடைந்துள்ளனர்.