மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியா, தற்போது ஒரு இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது என்று, அமெரிக்க எம்பி ஆண்டி லெவின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், மிச்சிகன் மாகாணம் சார்பில் கடந்த 2019 முதல் ஜனநாயக கட்சியின் எம்பியாக இருந்த லெவின், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் பிரதிநிதிகள் சபையில் அவர் ஆற்றிய உரையில், “அமெரிக்கா மனித உரிமைகளை காப்பாற்றுவதில் அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. இருப்பினும், பல பகுதிகளில் நிலைமை மோசமாக இருந்தது.
மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியா, தற்போது ஒரு இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது. நான் இந்து மதத்தை நேசிப்பவன். இந்தியாவில் பிறந்த சமணம், பவுத்தம் மற்றும் பிற மதங்களை நேசிப்பவன். ஆனால், அங்குள்ள அனைத்து மக்களின் உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். அவர்கள் முஸ்லீம்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் என யாராக இருந்தாலும் சரி.
இன்றைய நரேந்திர மோடியின் இந்தியா நான் காதலித்த இந்தியா கிடையாது. நான் நேசிக்கும் ஒரு நாட்டை நான் ஏன் இவ்வளவு பகிரங்கமாக விமர்சிக்க வேண்டும்..?. ஏனென்றால், நான் இந்தியாவை நேசிப்பதால்தான், அதன் மக்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
ஒரு இளைஞனாக நான் அறிந்த துடிப்பான இந்திய ஜனநாயகத்திற்கான எனது ஆதரவில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். தலைமுறை தலைமுறையாக அந்த ஜனநாயகம் செழிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.