ராசிபுரம்: அனுமதியின்றி மரங்களை வெட்டியதாக அரசு கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

ராசிபுரம் அனுமதியின்றி மரங்கள் வெட்டியதாக எழுந்த புகாரில் அரசு கல்லூரி முதல்வரை பணியிடை நீக்கம் செய்து உயர் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகளூர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 3500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட இந்த கல்லூரி வளாகத்தில் பல்வகை மரங்கள் உள்ளன.
image
இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களை இயந்திரம் மூலம் வெட்டி; வெளியே கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டதாக வருவாய்த் துறையினருக்கு மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.. இதனையடுத்து, அக்டோபர் 31 ஆம் தேதி வருவாய் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் கல்லூரி வளாகத்தில் ஆய்வு நடத்தினர்.
இதில், 6 வேப்ப மரங்கள், 2 வாகை மரங்கள், 11 ஆயன் மரங்கள் என மொத்தம் 19 மரங்கள் முழுமையாகவும், 7 மரங்கள் கிளைகள் மட்டும் வெட்டி அகற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. எந்தவித அரசு முன்னனுமதியின்றி கல்லூரி முதல்வர் எஸ்.பங்காரு உத்தரவின் பேரில் 17 டன் எடை கொண்ட இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
image
இதையடுத்து வெட்டப்பட்ட மரங்கள் குறித்த அளவீடு மற்றும் விலை மதிப்பு குறித்து விசாரணை அறிக்கை வழங்க நாமக்கல் மாவட்ட வனத் துறையினருக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில் வனத் துறையினர் கல்லூரி வளாகத்தில் வெடப்பட்ட மரங்கள் வகைகள், எடை அளவீடு, விலை மதிப்பு போன்றவற்றை ஆய்வு செய்தனர். இதில் மொத்தம் 17 டன் எடை கொண்ட வேப்பம், வாகை, ஆயன் என 19 மரங்கள் முழுமையாகவும், 7 மரங்கள் கிளைகளும் வெட்டப்பட்டது தெரியவந்தது.
இதன் மொத்த மதிப்பு ரூ. 43 ஆயிரத்து 729 என்றும், தேசிய பசுமை தீர்ப்பாயம், சென்னை உயர் நீதிமன்றம், மாவட்ட பசுமைக்குழு உத்தரவின்படி முழுமையாக வெட்டப்பட்ட 19 மரங்களுக்கு ஈடாக மரம் ஒன்று தலா 10 மரக்கன்றுகள் என 190 மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டுவைத்து 8 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும் என்றும் நாமக்கல் வனக்கோட்ட வன அலுவலர் அறிக்கை சமர்பித்திருந்தார்.
image
இதன் அடிப்படையில், வனத்துறை அறிக்கையினை ஆய்வு செய்த நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா, கல்லூரி வளாகத்தில் புதியதாக 190 மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதுடன், வெட்டப்பட்ட மரங்களின் விலை மதிப்புக்கு ஈடாக 5 மடங்கு அபராதமாக மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 645 ரூபாயை அபராதம் செலுத்த கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்திய நிலையில், கல்லூரி வளாகத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய கல்லூரி முதல்வர் பங்காருவை பணியிடை நீக்கம் செய்து உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மரம் வெட்டியது குறித்த விசாரணை முடியும் வரை பங்காரு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.