வாரிசு படத்திற்கு கம்மியான திரையரங்கா? விஜய் ரசிகரின் பதில்!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படம் பொங்கல் 2023-ல் வெளியாக உள்ளது.  இந்த படம் மீது ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  வாரிசு படத்துடன் துணிவு படம் வெளியாக உள்ளது.  மேலும், விஜய் சமீபத்தில் தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.  இந்த மாதம் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.  வாரிசு படம் பற்றி பல விசயங்களை விஜய்யின் தீவிர ரசிகரும், காஞ்சிபுரம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியான ராம்குமார் பேசியுள்ளார்.  

வாரிசு படம் குறித்து விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கு?

ஆரம்பத்தில் வாரிசு படம் மீது எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம் என்று தான் இருந்தோம், காரணம் இந்த படம் முழுக்க முழுக்க தெலுங்கு படம் என்று தான் விஜய் ரசிகர்களிடம் இருந்து வந்தது.  வாரிசு படத்தின் மீது நம்பிக்கை வரும் அளவில் எதுவும் ஆரம்பத்தில் இல்லை.  பீஸ்ட் படம் மீது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பில் இருந்தனர்.  ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.  கத்தி, மெர்சல் அளவிற்கு பீஸ்ட் இல்லாதது மிகவும் ஏமாற்றம் அளித்தது.  வாரிசு ஒரு குடும்ப படம் என்று செய்திகள் வெளியானது.  மேலும், விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தளபதி 67 படத்தின் மீதுதான் எதிர்பார்ப்புகள் இருந்தது.  ஆனால் படத்தின் பர்ஸ்ட் லுக், பாடல்கள், போஸ்டர்கள் வர வர படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம் ஆகி உள்ளது.  வம்சி இயக்கிய தோழா படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்து இருந்தது.  அதே போல் வாரிசு படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.  தமன் இசையில் வெளியாகி உள்ள 2 பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.  டீசர், ட்ரைலர் வந்தால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகம் ஆகும்.

துணிவு படம் வாரிசு படத்துடன் வருவதால் எதிர்பார்ப்பு அதிகம் ஆகி உள்ளதா?

முற்றிலும் இல்லை, கேஜிஎப் படத்துடன் தான் பீஸ்ட் படம் வெளியானது.  விஜய்க்கு பேமிலி ஆடியன்ஸ் ஜாஸ்தி.  மேலும் தமிழகத்தை தாண்டியும் பல மாநிலங்களில் விஜய்க்கு ரசிகர்கள் உள்ளனர்.  இதனால் பொதுவாகவே எதிர்பார்ப்பு அதிகம் ஆகி உள்ளதே தவிர துணிவு படத்தினால் இல்லை.

சமீபத்தில் விஜய் தன் ரசிகர்களை சந்திப்பது அதிகம் ஆகி உள்ளதே?

விஜய் பொதுவாகவே ரசிகர்களை சந்திப்பார், கொரோனா காலத்தால் இது கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.  தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது, எப்போதும் வருடத்திற்கு 2,3 முறை ரசிகர்களை சந்திப்பார்.  தளபதி 67 படம் ஆரம்பிக்கும் வரை அனைத்து மாவட்ட ரசிகர்களையும் சந்திப்பதற்கு திட்டம் வைத்துள்ளார்.  

விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பொதுவான பேச்சு உள்ளது.  விஜய் மக்கள் மன்ற நிர்வாகியாக உங்கள் கருத்து என்ன?

விஜய் மக்கள் மன்ற நிர்வாகியை விட, பொதுவான ரசிகனாய் அவர் வந்தால் நன்றாக இருக்கும்.  அவர் அரசியலுக்கும் வந்தாலும் சரி வரவில்லை என்றாலும் சரி விஜய் அண்ணா கூட நிப்போம்.  ரஜினி, கமல் இருவரும் அவர்களது சினிமா கேரியர் முடியும் சமயத்தில் வந்தார்கள்.  ரஜினி 96-ல் வந்து இருந்தால் இன்றைய அரசியல் சூழ்நிலையே மாறி இருக்கும்.  விஜய்யின் முகத்தை காட்டி மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ளனர்.  அப்போ இறங்கி பேசினால் என்ன ஆகும் என்று நீங்களே நினைத்து கொள்ளுங்கள்.  அடிப்படை கட்டமைப்பை விஜய் பலப்படுத்தி வருகிறார்.  திராவிட கட்சிகளின் வேர் தமிழ்நாட்டில் பெரிது. அதனை தாண்டி வெற்றி பெற்றாக வேண்டும் என்றால் அடிப்படை பலமாக இருக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் ஒரு லட்சம் ரசிகர்களை இணைக்க சொல்லி இருப்பதாக செய்திகள் வருகிறது.  அதனை நோக்கி செல்கிறோம்,  கண்டிப்பாக நேரடி அரசியலில் விஜய் இருப்பார்.

வாரிசு படத்திற்கு திரையரங்குகள் கொடுக்கப்படவில்லை என்று குற்றசாட்டுகள் எழுகிறதே?

வாரிசு படம் தான் முதலில் பொங்கல் வெளியீடு என்று அறிவித்தது.  ஆனால், துணிவு படமும் அதே சமயத்தில் முடிவு செய்யப்பட்டது என்று உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் கூறி இருந்தார்.  தில் ராஜீ கூட வாரிசு படத்திற்கு கூடுதல் திரையரங்கு ஒதுக்க கோரி பேச உள்ளதாக கூறி இருந்தார்.  ஆனால் கண்டிப்பாக இரண்டு படத்திற்கும் சமமான திரையரங்கு தான் ஒதுக்கப்படும். அதில் மாற்று கருத்து இல்லை.

துணிவு படத்தின் மீது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

நல்ல படங்கள் எதுவாக இருந்தாலும் மக்கள் ஆதரவு இருக்கும்.  விஜய் ரசிகர்களுக்கு வினோத் மீது நம்பிக்கை உள்ளது.  அவரது முந்தைய படங்கள் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று மிகப்பெரிய வெற்றி பெற்றது.  ஆனால் வலிமை சரியாக போகவில்லை.  அஜித் ரசிகர்களுக்கு கூட வலிமை படம் பிடிக்கவில்லை.  குறிப்பாக செண்டிமெண்ட் காட்சிகள் ஒர்க் ஆகவில்லை.  அஜித் படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் இல்லை என்று சொல்வார்கள், ஆனால் விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு காரணம் பேமிலி ஆடியன்ஸ் தான்.  வலிமையில் நடந்த தவறை துணிவில் சரி செய்து இருந்தால் படம் கண்டிப்பாக ஹிட் தான்.  துணிவும் வெற்றி படம் ஆகா வேண்டும் என்பதுதான் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.