என் மகனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்..! அவர் கிரிக்கெட்டை நேசிக்கட்டும் – சச்சின் தெண்டுல்கர் வேண்டுகோள்

மும்பை,

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகனான அர்ஜுன் தெண்டுல்கர், மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கோவா அணிக்கு மாறினார். மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக இதுவரை 7 டெஸ்ட் ஏ, 9 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்த நிலையில் இந்த வருடம் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகியுள்ளார் அர்ஜுன் தெண்டுல்கர். கோவா – போர்வோரிமில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜுன் தெண்டுல்கர் 207 பந்துகளைச் சந்தித்து 107 ரன்களை எடுத்து அசத்தினார் . இந்த இன்னிங்சில் 16 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் விளாசினார்

23 வயது அர்ஜுன் தெண்டுல்கர் தனது அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதமடித்து அசத்தி உள்ளார். சச்சின் தெண்டுல்கர் தனது அறிமுக ரஞ்சி ஆட்டத்தில் சதமடித்தது போல அர்ஜுனும் சதமடித்துள்ளார்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரரின் மகன் என்பதாலேயே அர்ஜுனின் குழந்தைப் பருவம் ஒரு சாதாரணமான குழந்தைப் பருவமாக இல்லை என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ;

அர்ஜுனின் குழந்தைப் பருவம் ஒரு சாதாரணமான குழந்தைப் பருவமாக இல்லை. ஒரு கிரிக்கெட் வீரரின் மகனாக அர்ஜுன் நிச்சயம் பல கடினங்களைச் சந்தித்துள்ளார். நான் ஓய்வு பெற்ற பிறகு ஊடகங்கள் என்னைக் கவுரவித்து ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தபோதே நான் ‘அர்ஜுன் மீது அழுத்தம் ஏற்ற வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டேன். அர்ஜுன் கிரிக்கெட்டை நேசிக்கட்டும். அவனுக்கு அந்த வாய்ப்பை வழங்குங்கள் என்று நான் அப்போதே கேட்டுக் கொண்டேன்.

அர்ஜுனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள், நான் ஆடும்போது என் பெற்றோரிடமிருந்து எனக்கு எந்தவித அழுத்தமும் வந்ததில்லை. என்னை நான் சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ள என் பெற்றோர் என்னை அனுமதித்தனர்.

எதிர்பார்ப்புகளின் அழுத்தங்கள் எனக்கு இல்லை. நான் எப்படி என்னை கிரிக்கெட் வீரனாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஊக்கமும் ஆதரவும் மட்டுமே எனக்கு இருந்தது. இதையேதான் அர்ஜுனுக்கும் நான் விரும்புகிறேன். என்று கூறினார்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.