மசினகுடி அருகே கிராமத்தில் புகுந்து ஆட்டை கொன்ற புலி சேற்றில் சிக்கி பலி

கூடலூர்: மசினகுடி அருகே கிராமத்தில் புகுந்து ஆட்டை கொன்ற புலி சேற்றில் சிக்கி பலியானது. நீலகிரி மாவட்டம் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுளியை அடுத்த கள்ளஞ்சேரி கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் ஆடு வளர்த்து வந்தார். அவர் வளர்த்த ஆட்டை கடந்த 2 நாட்களுக்கு முன் புலி ஒன்று வேட்டையாடியது. இதனை அப்பகுதியில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தவர்கள் நேரடியாக பார்த்து கூச்சலிட்டதால் ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு மெதுவாக புலி புதருக்குள் ஓடி மறைந்தது.

ஆட்டை வேட்டையாடிய புலி மிகவும் சோர்வாக காணப்பட்டதாகவும், புலியின் வயிறு பகுதி ஒட்டிய நிலையில் காணப்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அப்பகுதியில் ஆய்வு செய்த வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று ரோந்து சென்ற வனத்துறையினர் புலி ஒன்று சேற்றில் சிக்கி இறந்து கிடப்பதை பார்த்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று சேற்றில் சிக்கி இறந்த புலியின் உடலை மீட்டனர். இறந்தது 11 வயதான பெண் புலி என்பது தெரிய வந்தது. முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முன்னிலையில் தெப்பக்காடு வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் ஓவேலி கால்நடை மருத்துவர் நந்தினி ஆகியோர் புலியின் சடலத்தை உடற்கூராய்வு மேற்கொண்டு, முக்கிய உடல் உள்ளுறுப்புகளை ஆய்விற்காக எடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திலேயே இறந்த புலியின் உடல் எரியூட்டப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.