கடந்த ஒரு மாதத்தில் பழநி முருகன் கோயிலில் 10.84 லட்சம் பேர் தரிசனம்: ரூ.19.24 கோடி வருவாய்

பழநி: பழநி முருகன் கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் 10.84 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் 19.24 கோடி ரூபாய் கோயிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு கடந்த நவ.17-ம் தேதி கார்த்திகை மாதப் பிறப்பில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதன்படி, நவ.17-ம் தேதி முதல் டிச.15-ம் தேதி வரை கடந்த ஒரு மாதத்தில் 10 லட்சத்து 84 ஆயிரத்து 242 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். ரோப் கார் மூலம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 678 பக்தர்கள், வின்ச் ரயில் மூலம் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 956 பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றுள்ளனர்.

நாள் முழுவதும் அன்னதான திட்டத்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 549 பக்தர்கள் உணவருந்தியுள்ளனர். விலையில்லா பஞ்சாமிர்தம் பிரசாதத்தை 3 லட்சத்து 97 ஆயிரத்து 125 பக்தர்கள் பெற்றுள்ளனர்.

படிப்பாதை மற்றும் யானைப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்ற ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு இலவச நீர்மோர் மற்றும் சுக்கு காபி வழங்கப்பட்டுள்ளது.

அபிஷேக பஞ்சாமிர்தம் விற்பனை மூலம் ரூ.8.58 கோடி, உண்டியல் வருவாய் ரூ.3.75 கோடி, லட்டு, முறுக்கு உள்ளிட்ட பிரசாதம் மூலம் ரூ.70.03 லட்சம், தங்கரதம், தங்க தொட்டில், தரிசன கட்டண சீட்டு உள்ளிட்டவை மூலம் மொத்தம் ரூ.19 கோடியே 24 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ஆ.நல்லசிவன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.