வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் புதுச்சேரி இடையே அடுத்த மாதம் முதல் கப்பல் போக்குவரத்து துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் துறைமுகம், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டி சில்வா கூறியதாக அந்நாட்டு நாளிதழில் வெளியான செய்தியில், அடுத்த மாதம் (2023 ஜன., மத்தியில்) முதல் காங்கேசன் துறைமுகம் முதல் புதுச்சேரி இடையே கப்பல் போக்குவரத்து துவக்க இந்தியா ஒப்பு கொண்டுள்ளது. ஜாப்னாவில் ஏராளமான இந்தியர்கள் வணிகம் செய்து வருகின்றனர். படகு போக்குவரத்து துவங்குவதன் மூலம், வெளிநாட்டு வருமானம் கிடைக்கும். இந்தியாவிற்கு செல்லும் புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கும் உதவியாக இருக்கும். மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த படகு போக்குவரத்து துவக்கப்படுகிறது.

தென் இந்தியாவில் இருந்து திரிகோணமலை மற்றும் கொழும்பு இடையேயும் பயணிகள் போக்குவரத்து சேவை விரைவில் துவக்கப்படும். தலைமன்னார் முதல் இந்தியா இடையே படகு போக்குவரத்து துவங்குவது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
ஒரே நேரத்தில் 300 முதல் 400 பயணிகளை ஏற்றி செல்லும் வகையில், புதிய சேவை துவக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் பயணி ஒருவருக்கு இலங்கை பண மதிப்பில் 21 ஆயிரம்(60 அமெரிக்க டாலர்) வசூலிக்கப்பட உள்ளதாகவும், பயணி ஒருவர் 100 கிலோ எடை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement