ஆவின் நெய் விலை உயர்வு; “மக்கள்படும் துன்பம், திமுக ஆட்சியை வீழ்த்திவிடும்!" – ஓபிஎஸ்

`ஆவின் பொருள்களின் விலையயை உடனடியாக குறைக்க வேண்டும். இல்லையெனில் மக்கள்படும் துன்பம் தி.மு.க ஆட்சியை வீழ்த்திவிடும்’ என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் எச்சரித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், “பெட்ரோல் விலை குறைக்கப்படும், டீசல் விலை குறைக்கப்படும், மின் கட்டணம் குறைக்கப்படும், சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது, ரேஷன் கடைகளில் கூடுதலாக சக்கரை வழங்கப்படும், உளுத்தம் பருப்பு வழங்கப்படும், எரிவாயு உருளைக்கு மானியம் வழங்கப்படும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும், நகை கடன் ரத்து செய்யப்படும், முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும், மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும், பழைய ஓய்வுதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றெல்லாம் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு,

ஆவின் பால்

ஆட்சிக்கு வந்த தி.மு.க கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டு, அனைத்து கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தியதோடு, ஆவின் நெய் விலையை மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளதை பார்க்கும்போது, ‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கலாமா’ என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி, ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, ஒன்றரை ஆண்டுகளில் பால் பொருள்களின் விலை அனைத்தையும் பன்மடங்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி ஏழை எளிய மக்களை ஆற்றமுடியாத துயரத்தில் ஆழ்த்தியது தி.மு.க அரசு. இது எல்லாம் போதாதென்று தற்போது ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் 515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை, 535 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜூலை மாதம் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி என்று சொல்லி 535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ நெய் விலை 580 ரூபாயாக இரண்டாவது முறை உயர்த்தியது. இந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை 580 ரூபாயிலிருந்து 630 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின்

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தி.மு.க, ஆட்சிப் பொறுப்பேற்றபோது 515 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சாதாரண நெய்யின் விலை தற்போது 630 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது நெய்யின் விலை சுமார் 23 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது போதாது என்று வெண்ணெய்யின் விலையும் கிலோவுக்கு 20 ரூபாய் உயர்த்தி மக்களை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது தி.மு.க அரசு. தொடர்ந்து மக்கள் மீது கூடுதல் நிதிச் சுமையை சுமத்திக் கொண்டே இருக்கிற தி.மு.க அரசின் மக்கள் விரோத செயல்பாட்டிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விலை உயர்வின் மூலம், ஏழை எளிய மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், நெய், வெண்ணெய் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் தின்பண்டங்களின் விலையும் அதிகரிக்கும். மொத்தத்தில் பொதுமக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக தி.மு.க அரசு விளங்கி வருகிறது. தி.மு.க-வின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளை பார்த்து ‘உபகாரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமல் இருந்தால் சரி’ என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். தி.மு.க அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு. மக்கள் விரோத அரசு. ஏழைகளுக்கு எதிரான அரசு என்பதை கடந்த ஒன்றரை ஆண்டுக்கால அனுபவத்தில் மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டனர்.

ஓபிஎஸ்

எனவே, ஆவின் பொருள்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் மக்கள்படும் துன்பம் தி.மு.க ஆட்சியை வீழ்த்திவிடும்” எனத் தெரிவித்திருக்கிறார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.