36 ஆண்டுகள் பிறகு உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா..!!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட ‘நம்பர் ஒன்’ அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால்இறுதியில் குரோஷியாவிடம் மண்ணை கவ்வியது.

லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதின.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடியதால் ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் அர்ஜெண்டினா அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பே, ஆட்டத்தின் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் தனது அணிக்கான அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து போட்டியை சமன் செய்து அசத்தினார்.

போட்டி சமன் ஆனதால் இரு அணி வீரர்களும் கூடுதல் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சியகள் தோல்வி அடைந்தன. 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில் அர்ஜென்டினா அணி வீரர் மெஸ்சி போட்டியின் 108 நிமிடத்தில் கோல் அடிக்க அரங்கமே அதிர்ந்தது. இவரைத்தொடர்ந்து பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பேவும் ஆட்டத்தின் 118-வது நிமிடத்தில் தனது அணிக்கான 3-வது கோலை அடிக்க ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியும் ரசிகர்களை உச்சகட்ட பரபரப்பில் உறைய வைத்தது.

கூடுதல் நேரம் முடிவடைந்த நிலையில் ஆட்டம் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது குறிப்பிடத்தக்கது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.