அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். குஜராத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ 156 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக புபேந்திர படேல் கடந்த 12ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 16 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதனை தொடர்ந்து முதல்வர் புபேந்திர படேல் உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். பாஜவின் எம்எல்ஏக்களில் மூத்த எம்எல்ஏவும், தற்காலிக சபாநாயகருமான யோகேஷ் படேல் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் 15வது சட்டமன்ற கூட்டத்தில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருகான தேர்தல் நடைபெறுகின்றது. இதற்காக பாஜ சார்பாக முறையே சங்கர் சவுத்ரி மற்றும் ஜெதாபாய் பார்வாத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 17 இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சி எந்த பதவிக்கும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
