போபால்: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ள ‘பதான்’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடைஅணிந்து இருந்தார். இந்து துறவிகள், சாமியார்கள் அணியும் காவி நிற உடையை அணிந்து இதுபோன்று நடனம் ஆடலாமா என இந்துத்துவா அமைப்புகள், போர்க்கொடி தூக்கியுள்ளன.
மத்திய பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, பதான் படத்தில் உள்ள ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை மாற்றாவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய பிரதேச சபாநாயகர் கிரிஷ் கவுதம் நேற்று கூறியதாவது: நடிகர் ஷாருக் கான், அவரது மகள் சுஹானா கானுடன் படத்தைப் பார்த்து, இந்தப் படத்தை எனது மகளுடன் பார்க்கிறேன் என்று ஒரு புகைப்படம் எடுத்து அதை உலக மக்களுக்காக வெளியிட வேண்டும். நபிகள் நாயகத்தைப் பற்றி இதே போன்ற படத்தைத் தயாரித்து இயக்கி, அதை கருத்து சுதந்திரம் என்று கூறுவாரா?
கனடாவில் இறைதூதர் முகமது நபி தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட போது, மும்பையே பற்றி எரிந்தது. அதில் ரூ.100 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அப்போது அது உங்கள் பிரச்சினையாக பார்க்கப்பட்டது.
ஈரானில் பெண்கள் ஹிஜாப் (பர்தா) அணிய மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்திய போது அது ஈரானின் பிரச்சினை என்று டி.வி. பேட்டிகளில் அடிக் கடி நீங்கள் (ஷாருக் கான்) கூறுகிறீர்கள். இனிமேலும் இந்த பேச்சுகள் இங்கு எடுபடாது. ஏனெனில் சனாதன மக்கள் இப்போது விழிப்படைந்துள்ளனர். அந்த மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. மிகவும் சகிப்புத் தன்மையுடன் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் மத்தியஅமைச்சர் சுரேஷ் பச்சோரி கூறும்போது, ‘‘பதான் படத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாடலில் இடம்பெற்றுள்ள உடைகள் ஆட்சேபத்துக்கு உரியவை. இப்பாடல் ஒரு மோசமான மனநிலையை பிரதிபலிக்கிறது’’ என்றார்.