அதிமுக உட்கட்சி மோதல் முடிவை எட்டாமல் நீண்டு கொண்டிருக்க உச்ச நீதிமன்ற விசாரணை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்,
இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அதை எதிர்த்து
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தனி நீதிபதி உத்தரவு அவருக்கு சாதகமாகவும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பொதுக்குழு செல்லும் என்று உத்தரவு பிறப்பித்தது.
அதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அந்த விசாரணை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கட்சி கட்டமைப்பு முழுவதும் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும் நிலையில், கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள், அதிருப்தியாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பதவிகளை வழங்கி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். மாவட்டச் செயலாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் என பலரை நியமித்துள்ளார்.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், தனது தலைமையில் ஒரு அணியும் இயங்கி வருகிறது என்று நிறுவ ஓபிஎஸ் முயற்சித்து வருகிறார். அந்த வகையில் நாளை காலை 10 மணிக்கு சென்னை, வேப்பேரி ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்சிஏ திருமண மண்டபத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்ற அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டார்.
அதிமுக ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அதற்கான ஆவணங்களை ஜனவரி 4ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையின் போது வழங்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து விரைவில் பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
நாளைய கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்படும் என்று விசாரித்த போது, சட்ட ரீதியாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கப்படும். எம்ஜிஆர் நினைவு நாள், பிறந்த நாள் நிகழ்வுகளில் செய்ய வேண்டியவை குறித்து திட்டமிடப்படும், பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி தரப்பிலோ ஓபிஎஸ் தரப்பு என்னென்ன செய்கிறது என்பதை கவனிக்க தவறவில்லை. அதேசமயம் ஓபிஎஸ் முன்னெடுப்பது எதுவும் கதைக்கு உதவாது என்பதே அவர்களது எண்ணமாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு எவ்வளவு விரைவாக வெளியாகிறதோ அவ்வளவு நமக்கு நன்மை என்று கருதுகிறார்களாம். விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் வைத்து யாரும் அசைத்துப் பார்க்க முடியாத அளவு பலம் பெற்றுவிடலாம் என்பது எடப்பாடி பழனிசாமி தரப்பின் திட்டமாக உள்ளது என்கிறார்கள்.