கடலூர் மாவட்டத்தில் உள்ள சேலம் சாலையில் அடரியில் அழகேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
கடந்த டிசம்பர் 18ஆம் தேதி சொந்த வேலை காரணமாக குடும்பத்துடன் விருத்தாசலத்திற்கு சென்ற அழகேசன் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கே பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்துள்ளது.
பூட்டிய வீட்டில் எப்படி கொள்ளை நடந்தது என்பது புரியாமல் உடனே சிறுபாக்கம் போலீசுக்கு அழகேசன் தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் வீட்டை ஆய்வு செய்தனர்.
பின், வேப்பூர், திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து காவல்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டு தீவிரமாக கொள்ளையர்களை தேடிய நிலையில் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்ததில் அப்பகுதியில் பர்தா அணிந்தவாறு ஒரு முஸ்லிம் பெண் சென்றுள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லப்பைகுடிக்காடு அருகே இருக்கும் கலீல் பாஷா என்பவரின் மனைவி சம்சாத் பேகம் (வயது 33) என்பது தெரியவந்துள்ளது. அவர்தான் களவு போன பொருட்களை திருடினார் என்பதும் தெரியவந்துள்ளது.
பூட்டிய வீட்டில் தடயமே இல்லாமல் எப்படி திருடினீர்கள் என்று கேட்டதற்கு அந்த வீட்டை அவர்கள் பூட்டிவிட்டு அதன் சாவியை ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு செல்வார்களாம். அதை தூர இருந்து பார்த்து சாவியை எடுத்து திறந்து நகைகளை திருடிக் கொண்டு கிளம்பி விட்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.