ஈரோடு: ஈரோடு கீழ்பவானி கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பவனிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால். அம்மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 2 லட்சத்து 7ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கீழ்பவானி கால்வாய் மூலமே பாசனத்திற்கு தேவையான நீரை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் பெருந்துறை அருகே வாய்க்கால்மேடு என்ற இடத்தில் கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பவானி சாகர் அணையிலிருந்து கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
உடைப்பை சரி செய்ய இரவு, பகலாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. பாசனத்திற்கு தேவையான தண்ணீர் 10 நாட்களாக கிடைக்காததால் கீழ்பவானி கால்வாயை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகினர். ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, அரச்சலூர், வடுக்கப்பட்டி, ஏழுமாத்தூர் உள்ளிட்ட இடங்களில் நெற்பயிர்கள் வறண்டு காட்சியளிக்கின்றன. சென்னிமலை பகுதியில் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் சிலர் 800 ருபாய் விலைகொடுத்து லாரித் தண்ணீரை வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர்விடும் தருவாயில் போதிய தண்ணீர் இல்லாததால் தவிப்புக்குள்ளாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். லாரி தண்ணீர் விலை நிலங்களை ஈரபடுத்தமட்டுமே உதவும் என தெரிவித்துள்ள விவசாயிகள் அதுவரை பயிர்களை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர். எனவே அடிக்கடி கால்வாய்கள் உடைந்து பழுது ஏற்படுவதை தடுக்க அரசு திட்டமிட்டபடி கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.