சென்னை தாம்பரம் அடுத்து உள்ள சிட்லபாக்கம், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன். இவரது மகள் ஸ்ரீமதி (18). இவர், குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். முரளிதரன், தனது மனைவி மற்றும் மகனுடன் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்று விட்டார். வீட்டில் ஸ்ரீமதி மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீமதி, தேர்வு மையத்துக்கு செல்போன் எடுத்து சென்றார். இதனால் அவரை கண்டித்த கல்லூரி நிர்வாகம், அவரது பெற்றோரையும் தொடர்பு கொண்டு ‘இனிமேல் கல்லூரி தேர்வு மையத்துக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்று உங்கள் மகளை கண்டிக்கும்படி’ தெரிவித்தனர்.
இதனால் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீமதியை தொடர்பு கொண்ட அவரது பெற்றோர், ‘இனிமேல் கல்லூரிக்கு செல்போன் எடுத்து செல்லக்கூடாது. வீட்டிலும் அதிகம் பயன்படுத்தக்கூடாது’ என மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது.
பெற்றோர் கண்டித்ததால் ஸ்ரீமதி மிகவும் மனவேதனை அடைந்தார். சிறிது நேரம் கழித்து அவரது பெற்றோர் மீண்டும் தொடர்பு கொண்டபோது ஸ்ரீமதி செல்போனை எடுக்கவில்லை நேற்று காலை மீண்டும் ஸ்ரீமதியை அவரது பெற்றோர் செல்போனில் அழைத்த போது அவர் போனை எடுக்காததால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பக்கத்து வீட்டினரை தொடர்பு கொண்டு வீட்டில் சென்று பார்க்கும்படி கூறினர்.
அதன்படி அவர்கள் முரளிதரன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு வீட்டின் உள்ளே மாணவி ஸ்ரீமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிட்லபாக்கம் போலீசார், தூக்கில் தொங்கிய ஸ்ரீமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.