சென்னை: தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருமளவு இல்லாத காலகட்டத்தில் வீரப்பனை பிடிப்பது மிகவும் சவாலாகஇருந்தது. பல்வேறு யுக்திகளைக் கையாண்டு திட்டத்தை நிறைவேற்றினோம் என்று ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் கூறினார்.
தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்கள் சந்திக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையொட்டிய வனப்பகுதியில் 20 ஆண்டுகளாக மறைந்திருந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த சந்தன கடத்தல்காரரான வீரப்பன், தமிழக சிறப்பு அதிரடிப் படையினரால் 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி சுட்டுகொல்லப்பட்டார்.
இந்த படைக்கு தலைமை தாங்கியவரும், தற்போது ஓய்வுபெற்றுள்ள ஐபிஎஸ் அதிகாரியுமான விஜயகுமார், வீரப்பனுக்கு எதிரான தேடுதல்வேட்டையில் தனது அனுபவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார். ‘வீரப்பன்: சேசிங் தி பிரிகண்ட்’ என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ள இந்த நூலில், வீரப்பன் செய்த கடத்தல், கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகம் அமேசானின் ஏசியவில்லே நிறுவனம் சார்பில் ஆடியோவடிவில் 20 பாகங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆடியோ புத்தகத்தில் வீரப்பன் 1952-ம் ஆண்டு கோபிநத்தத்தில் பிறந்தது முதல் 2004-ல் சுட்டுக் கொல்லப்பட்டது வரை முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒரு சிறிய வேட்டைக்காரனாக வாழ்க்கையைத் தொடங்கிய வீரப்பன், 3 மாநிலங்களை எவ்வாறு ஆட்டிப் படைத்தார், கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி 108 நாட்கள் சிறை வைத்தது, கடைசி கட்ட என்கவுண்டர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் பேசியதாவது:
தற்போதைய இளைய தலைமுறையினர் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினர் பற்றி அறிந்திருக்கக் கூடும். ஆனால், இந்தியாவின் மாபெரும் ஒரு கொள்ளைக்காரன் வீரப்பனைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உண்மை தகவலை வெளிக்கொணர: ஒருபுறம் அரசு அதிகாரிகளை இரக்கமின்றி கொலை செய்த வீரப்பன் ராபின் ஹூட் போல் நல்லவராக உருவகப்படுத்தப்படுகிறார். மற்றொருபுறம் ரத்தம் சொட்டக் கூடியகத்தியைக் கொண்டிருந்த கொடூரமான கொலைகாரராகவும் அவர் சித்தரிக்கப்படுகிறார்.
இத்தகைய முரண்களைக் களைந்து அனைத்து தலைமுறைக்கும் உண்மை தகவல்களைக் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆடியோவை கேட்பவருக்கு வீரப்பன் பற்றியும், எங்களது தனிப்படையினரின் பணிகுறித்தும் தெளிவான புரிதல் உருவாகும்.
தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருமளவு இல்லாத காலகட்டத்தில் வீரப்பனை பிடிப்பது சவாலாக இருந்தது. பல்வேறு யுக்திகளைக் கையாண்டு திட்டத்தை நிறைவேற்றினோம். இவ்வாறு அவர் பேசினார்.
சட்டத்தின்படி குற்றவாளி: தொடர்ந்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து விஜயகுமார் பேசும்போது, “வீரப்பன் சில தமிழ் தேசிய இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், மலைவாழ் மக்களுக்கு உதவிகள் செய்ததாகவும் எங்களுக்கு கிடைத்த உளவு தகவல்களில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்குள் ஆழமாகச் செல்லநான் விரும்பவில்லை. ஏனெனில், நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகள் உட்பட பல்வேறு குற்றங்கள் செய்தவீரப்பன் சட்டத்தின்படி குற்றவாளியா வார்.
மேலும், 1989-ம் ஆண்டு சொரக்கா மடுவில் நடத்திய கண்ணிவெடி தாக்குதல்தான் வீரப்பன் இழைத்த பெரும் தவறாகும். அதில் 22 பேர் பலியானார்கள். அதன் பின்னரே வீரப்பனை பிடிப்பதற்கான தீவிரம் அதிகமானது” என்றார்.