தமிழகத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தடுக்க தமிழக காவல் துறை நடவடிக்கை

தென்காசி: தென்காசி மாவட்டத்திற்கு கடந்த 08.12.2022 அன்று வருகை புரிந்த  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டப்படும் கேரள மாநில கழிவுகளினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்று சூழல் சீர்கேடுகள் குறித்த தனது அக்கறையினை வெளிபடுத்தினார்கள். மேலும் இப்பிரச்சனையை களைய நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

இதன் பேரில் தமிழக கேரளா எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி போன்றவற்றில் கேரளாவிலிருந்து கோழி இறைச்சி கழிவுகள் நெகிழி கழிவுகள் போன்றவை சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை இயக்குனர் முனைவர் C. சைலேந்திரபாபு அனைத்து எல்லையோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் திரும்ப வரும் போது குறைந்த பணத்திற்கு ஆசைப்பட்டு அங்குள்ள இடைத்தரகர்கள் மூலம் கழிவுகளை ஏற்றி வந்து இங்கு கொட்டிவிடுகின்றனர்.

தமிழகத்திலிருந்து கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்யும் பலர் அங்குள்ள நபர்களின் கடைகளில் குப்பைகளிலிருந்து பழைய இரும்பை பிரித்து எடுத்து விட்டு பின்பு மீதமாகும் உபயோகமில்லா குப்பையினை தமிழக எல்லைக்குள் சட்டவிரோதமாக கடத்துகின்றனர். இவற்றை தமிழகத்தில் உள்ள சில இடைத்தரகர்களின் உதவியோடு செல்கின்றனர். ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் கொட்டி மேலும் இது சம்பந்தமாக தமிழக கேரளா எல்லையோர மாவட்டத்திலுள்ள கனரக வாகன உரிமையாளர் கூட்டமைப்பினரிடம் கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள திருவேங்கடம் காவல் நிலையத்தில் இரு வழக்குகளும், ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக காவல்துறை தனிப்படை அமைத்து, இவ்வழக்குகளின் குற்றவாளிகளை கண்காணித்து, ஏழு கன ரக வாகனங்களை பறிமுதல் செய்தும், ஒன்பது நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழக கேரளா எல்லையோர சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் தென்காசி மாவட்டத்திற்குள் இது போன்று சட்ட விரோதமாக புளியரை சோதனை சாவடி வழியாக நுழைய முயற்சித்த நாற்பத்தைந்து வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மேற்படி வாகனங்கள் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.கிருஷ்ணராஜ் தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையினால் ஊத்துமலை காவல் நிலைய சரகத்தில் 13.12.2022 ம் தேதியன்று பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத பழைய டயர்கள் அடங்கிய கழிவுகளை கேரளவிலிருந்து கொண்டு வந்த புனலூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த இடைதரகரான கருப்பசாமி என்போர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டும் கழிவுகளை ஏற்றி வந்த கனரக வாகனம் பறிமுதலும் செய்யப்பட்டது.

மேலும் கேரளாவிலிருந்து உயிர் மருத்துவ கழிவுகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுவதை தடுப்பதற்கு, தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுப்பதற்கு, தென்மண்டலத்தில் இதற்கென ஒரு பிரத்யோக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் சம்மந்தபட்டுள்ள இடைத்தரகர்கள் பற்றிய தரவுகளை சேகரித்து மேற்படி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கர்க் அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.