காத்மாண்டு, அண்டை நாடான நேபாள சிறையில், 19 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்ய, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்தவர் சார்லஸ் சோப்ராஜ், 78. பல சிறிய குற்றங்களுக்காக பிரான்சில் பல்வேறு முறை சிறை சென்ற அவர், 1970களில், தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரில் குடியேறினார்.
அங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியருடன் நட்புடன் பழகி அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து வந்து போதை மருந்து கொடுத்து பல்வேறு கொலைகளை செய்துள்ளார்.
அவர்களது பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடி, அவர்கள் பெயரில் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். இவர் 20க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரான்சை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி, 1976ல் புதுடில்லி ஹோட்டலில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், புதுடில்லி போலீசார் சோப்ராஜை கைது செய்தனர். இவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1986ல் சிறையில் இருந்து தப்பிய அவர் கோவாவில் பிடிபட்டார்.
மீண்டும் புதுடில்லி சிறையில் அடைக்கப்பட்ட அவர், 1997ல் விடுதலை ஆனார். அதன் பின் பிரான்ஸ் நாட்டுக்கே சென்ற சோப்ராஜ், 2003ல் அண்டை நாடான நேபாளம் வந்தார்.
கடந்த 1975ல் இரண்டு அமெரிக்க சுற்றுலா பயணியரை கொலை செய்த வழக்கில், இவரை நேபாள போலீசார் கைது செய்தனர்.
கடந்த 19 ஆண்டுகளாக நேபாள சிறையில் உள்ள அவர், உடல்நிலையை காரணம் காட்டி தன்னை விடுவிக்க கோரினார்.
அவரது மனுவை விசாரித்த அந்தாட்டு உச்ச நீதிமன்றம், அவர் மீது வேறு வழக்குகள் நிலுவையில் இல்லாத பட்சத்தில் அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. அவர், 15 நாட்களுக்குள் பிரான்ஸ் திரும்பவும் அனுமதி அளித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்