மதுரை: தேர்தல் பிரச்சாரத்தின்போது வட்டாட்சியரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர், “தமிழகத்தின் திமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் 2011-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிக்காரர் கோயிலுக்குள் கிராமத் தலைவர்கள், பொதுமக்களுடன் அப்போது மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார். அந்நிலையில், தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் வழங்குவதாக அதிமுகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தனர். அதையடுத்து, மேலூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், வட்டாட்சியருமான காளிமுத்து வீடியோ கேமராமேனுடன் கோயிலுக்குள் சென்றுள்ளனர். அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் மு.க.அழகிரியுடன் இருந்த திமுகவினர் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக வட்டாட்சியர் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகரின் பேரில் மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், திமுக நிர்வாகிகள் ரகுபதி, திருஞானம் உட்பட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி லீலாபானு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், திமுக நிர்வாகிகள் ரகுபதி, திருஞானம், செந்தில், கருப்பணன், பொன்னம்பலம், ராமலிங்கம், நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், சோலை, போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் உள்பட 20 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். பின்னர் விசாரணையை ஜன. 6-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க.அழகிரியை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான மிசா.பாண்டியன் மற்றும் திமுகவினர் சந்தித்து பேசினர். மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள், ‘திமுக அரசின் செயல்பாடு எப்படியிருக்கிறது?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘திமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது’ என்று பதிலளித்தார்.