சேலத்தில் இரு சக்கரவாகனத்தில் சென்ற பெண்களை ஆட்டோவில் பின் தொடர்ந்து சென்று இடித்து தள்ளிவிட்டு தப்பிச்சென்ற ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் வின்செண்ட் சாலையில் அதிவேகமாக ஆட்டோ ஓட்டியதை கண்டித்த இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்களை பின் தொடர்ந்து சென்று ஆட்டோ ஓட்டுனர் இடித்து தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
இது குறித்து செய்தி வெளியான நிலையில் ஆட்டோவின் வாகன பதிவு எண்ணை கண்டு பிடிக்க அஸ்தம்பட்டி காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர்.
ஆட்டோவின் பின் பக்கம் ஒட்டப்பட்டிருந்த ஆதி யோகி என்ற ஸ்டிக்கர் மூலம் ஆட்டோவை அடையாளம் கண்டனர் .
சாலையில் தாறுமாறாக ஆட்டோவை ஒட்டியதோடு தட்டிக்கேட்ட பெண்களை இடித்து தள்ளிய ஆட்டோ ஓட்டுனர் வின்சென்ட் பகுதியை சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது.
அவரது முகவரியை கண்டுபிடித்து வீட்டுக்கு சென்ற போலீசார், போதை மயக்கத்தில் படுத்திருந்த அவரை விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு கூறி விட்டு அவருடைய ஆட்டோவை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இதனிடையே ஆட்டோ இடித்து பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் , ஆட்டோ ஓட்டுனருக்கு பயந்தும், பெண்களின் எதிர்காலம் கருதியும் புகார் தர மறுத்த நிலையில் , ஆட்டோ ஓட்டுனர் சிவா மீது பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாக போக்குவரத்து விதிமீறல்களின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.