
கர்நாடக அரசு மீது 40% ஊழல் குற்றச்சாட்டு கூறிய ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு தலைவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு தலைவராக இருப்பவர் கெம்பண்ணா. இவர் சமீபத்தில் தோட்டத் துறை அமைச்சர் முனிரத்னா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினார்.
பா.ஜ.க. ஆளும் கர்நாடக அரசு 40% லஞ்ச பணம் பெற்றுள்ளது என குற்றச்சாட்டு கூறியதுடன், இதுபற்றி பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதிக அளவிலான ஊழலால் உள்ளூர் ஒப்பந்ததாரர்களால் எந்த பணியையும் பெற முடியவில்லை என்று கூறினார்.

பிற மாநிலங்களை சேர்ந்தவர்களே பணிகளை பெறுகின்றனர் என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் பாட்டீல் என்ற கட்டட ஒப்பந்ததாரர் அரசு திட்ட பணிகளில் 40 சதவீதம் லஞ்சம் கேட்கப்படுகிறது என கூறியதுடன் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராகவும் குற்றச்சாட்டை கூறினார்.
இதனை தொடர்ந்து, பல ஒப்பந்ததாரர்கள் அரசு அதிகாரிகளுக்கு எதிராக இதேபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன் எதிரொலியாக, ஒரு மாத கால கட்டிட பணி நிறுத்தம் செய்யப்படும் என மிரட்டல் விடுத்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கர்நாடக ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு அறிவித்தது.
அவர்களின் பல கோரிக்கைகள் ஏற்கப்படும் என அரசு உறுதி கூறிய நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும், அதன் தலைவரான கெம்பண்ணா கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து அமைச்சர் முனிரத்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி கெம்பண்ணாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், அவர் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனால், அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு தலைவர் கெம்பண்ணாவை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்து உள்ளனர்.
newstm.in