"சாதியின் பெயரால் தொடக்கூடாது, கோயிலில் நுழையக்கூடாது என்பதெல்லாம் நொறுக்கப்பட்டுவிட்டது" – ஸ்டாலின்

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய `Karunanidhi A life’, மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் எழுதிய `A Dravidian Journey’ ஆகிய இரு புத்தகங்களின் தமிழாக்க புத்தகங்களான `கலைஞர் மு.கருணாநிதி வரலாறு’, `திராவிடமும் சமூக மாற்றமும்’ வெளியீட்டு விழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

இதில் முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் புத்தகங்களை வெளியிட்ட பின்னர் மேடையில் உரையாற்றிய ஸ்டாலின், “திராவிடம் என்றாலே சமூக மாற்றம்தான். சமூக மாற்றம் என்றாலே அது திராவிடத்தால் விளைந்ததுதான். சமூக சீர்திருத்தத்தை முன்வைத்துப் போராடிய தந்தை பெரியார் வழிவந்த அரசியல் கட்சிகள் பல்லாண்டுகளாக தமிழகத்தை ஆண்டாலும் தீண்டாமை நீடிக்கவே செய்தது என்று 77 பக்கத்தில் ஜெயரஞ்சன் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அந்த ஆயிரம் ஆண்டு சமூக அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

முதல்வர் ஸ்டாலின்

மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழக்கூடியது அல்ல. அதனை நாமும் அறியாதவர்கள் அல்ல. மாற்றத்தை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம். அதனால்தான் சாதியின் பெயரால் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, தெருவில், கோயிலில் நுழையக்கூடாது என்பதெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன. கல்வியும் படிப்பும் வேலையும் பதவியும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கையில் அதிகாரம் கொடுத்துவிட்டது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தியிருக்கக்கூடிய மாற்றம். கல்வி, வேலைகள், அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என பலவும் ஜனநாயகமயமானது. இந்த முன்னோக்கிய பாய்ச்சலில்தான் சமூகம் ஜனநாயகமயமாக வேண்டும். நமது திராவிட மாடல்களில் அதனைத்தான் சொல்லியிருக்கிறோம். கல்வியில், தொழிலில், உள்கட்டமைப்பில், சிந்தனையில் மட்டுமல்ல சமூகத்திலும் சேர்த்து வளருவதுதான் உண்மையான வளர்ச்சி என்று சொல்லியிருக்கிறோம்” எனப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.