* சுற்றுலா, வர்த்தகம் அதிகரிக்கும்
* காரைக்குடி மக்கள் எதிர்பார்ப்பு
காரைக்குடி : காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளம் இன்னும் நல்ல நிலையில் உள்ளது. அங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தன் பேரூராட்சியில் செட்டிநாடு கால்நடை பண்ணை 1,590 ஏக்கரில் உள்ளது.
இந்த கால்நடை பண்ணை இரு பகுதிகளாக உள்ளன. முதல் பகுதி உள்ள காரைக்குடி – திருச்சி சாலை அருகே மிகவும் பழமையான இன்னும் சிறிதும் சேதமடையாத விமான ஓடுதளம் உள்ளது. இப்பகுதியில் கடந்த 1930களில் எஸ்.ஆர்.எம்.எம்.அண்ணாமலை செட்டியாரால் இந்தியாவின் முதல் பிளையிங் கிளப் துவங்கப்பட்டது. இதன்பிறகு வள்ளல் அழகப்ப செட்டியாரால் துவங்கப்பட்ட ஜூபிடர் ஏர்லைன்ஸின் முதன்மை விமான நிலையமாக இது செயல்பட்டு வந்தது.
இதன்பிறகு விமான நிலையம் மூடப்பட்டது. பின்னர் இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கம், இங்கு விமானங்களை தரை இறக்கி எரிபொருள் நிரப்புவது, குண்டுகள் நிரப்புவது போன்ற பணிகளை மேற்கொண்டது. இதன்பிறகு இத்தளம் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள இரண்டு ஓடுதளங்களும் இன்னும் நல்ல நிலையில் சிறப்பாக உள்ளன. புதிதாக விமான நிலையம் அமைக்கும் அளவிற்கு இத்தளம் உறுதித்தன்மையுடன் உள்ளது. இத்தளம் 2,000 மீட்டர் நீளமும் 1,500 மீட்டர் அகலமும் கொண்டது என கூறப்படுகிறது. காரைக்குடி பகுதியை பொறுத்தவரை அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆய்வகம் உள்பட தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிகளவில் உள்ளதால் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா படப்பிடிப்புகளும் இங்கு நடந்து வருகிறது. ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய சுற்றுலா தலமாகவும் உள்ளது.
இங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து கருத்தரங்குகளுக்கு பலர் வந்து செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு இங்குள்ள மாணவர்கள் உயர்கல்விக்கு செல்கின்றனர். மேலும், சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் வசதிக்காக, இங்குள்ள விமான ஓடுதளத்தை நவீன முறைப்படி புதுப்பித்து ஒன்றிய அரசின் உதான் திட்டத்தில் உள்நாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள், வர்த்தகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பயன்பெறுவார்கள்.
இதுதொடர்பாக சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய நிலையில், ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை நேரில் சந்திந்து கோரிக்கை மனுவும் அளித்துள்ளார்.
அதில், ‘‘செட்டிநாட்டில் உதான் திட்டத்தில் விமானநிலையம் அமைக்கப்பட்டால் தொழில் முனைவோர்களுக்கு வசதியாக அமையும்.
சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு எளிதாக செல்லலாம். இங்கு விமானநிலையம் அமையும் பட்சத்தில் காரைக்குடி பகுதியில் உள்ள புராதன செட்டிநாட்டு அரண்மனைகள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் திருமயம், பிள்ளையார்பட்டி போன்ற ஆன்மீக தலங்களுக்கு வருபவர்களுக்கு ஏதுவாக அமையும். சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் என 3 மாவட்ட மக்களுக்கு இந்த விமான நிலையம் பயனுள்ளதாக அமையும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
காரைக்குடி தொகுதி எம்எல்ஏ மாங்குடி கூறுகையில், ‘‘செட்டிநாடு பகுதியில் ஏர்போர்ட் அமையும் பட்சத்தில் காரைக்குடி தொழில் நகரமாக வளரும். சுற்றுலா வளர்ச்சிக்கு இந்த ஏர்போர்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார். தொழில்வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி கூறுகையில், ‘‘செட்டிநாட்டில் உள்ள விமான ஓடுதளம் நல்ல உறுதித்தன்மையுடன் இன்றும் இருப்பதால் ஒன்றிய அரசு விமானத்துறையினர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துடன் இணைந்து விமானிகள் பயிற்சி மையம் நிறுவ ஆய்வு செய்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடித்து விமானிகள் பயிற்சி மைய பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இத்துடன் ஒன்றிய அரசின் உதான் திட்டத்தின் மூலம் உள்நாட்டு விமானநிலையம் அமைக்க வேண்டும். தென்மாவட்ட வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்’’ என்றார்.