பெங்களூரு: எட்டு நாட்களுக்கான தமிழ் புத்தக திருவிழா கோலாகலமாக துவங்கியது. முதல் நாளிலேயே தமிழ் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி குவித்தனர்.
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர் சங்கம் இணைந்து, பெங்களூரு தமிழ் சங்கத்தில் தமிழ் புத்தக திருவிழா ஏற்பாடு செய்துள்ளது.
இதன் துவக்க விழா நேற்று மாலை நடந்தது. முதலில் தமிழ் மொழி பாடலை, தமிழ் ஆர்வலர் ஒளி மலரவன் பாடினார். பெங்களூரு விவேக்நகரின் கனிமொழி, பரதநாட்டியம் ஆடி தமிழர்களை கவர்ந்தார். கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர் சங்க தலைவர் தனஞ்செயன் வரவேற்றார்.
விழாவின் சிறப்பு மலர் குழு தலைவர் கி.சு.இளங்கோவன், கர்நாடகாவின் தமிழர்களின் வரலாறு இடம்பெற்றிருப்பது குறித்து பேசினார். விழா தலைவர் கு.வணங்காமுடி, நோக்க உரை நிகழ்த்தினார்.
இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார். சிறப்பு மலரையும் வெளியிட்டார். மாணவர்களுக்கு புத்தக அன்பளிப்பு பரிசு கூப்பன் திட்டத்தை, பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் துவக்கி வைத்தார்.

தமிழில் பேசுவோம்; மயில்சாமி அண்ணாதுரை
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
பல்வேறு புத்தக திருவிழாவில் பேசியதை விட, பெங்களூரில் நடக்கின்ற இந்த தமிழ் புக்கத திருவிழாவில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். தாய் மொழியாம் தமிழ் மொழியில் கற்றதால் தான், ஒரு தமிழனால் நிலவுக்கு செயற்கைகோள் அனுப்ப முடிந்தது.
தமிழ் மொழி தான் ஒருத்தரை ஒருத்தர் உறவாட வைக்கிறது. தமிழ் கற்றலால் எழுச்சிபெறலாம். 48 ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ளேன். கர்நாடகாவில் மாணவர்கள் தயாரித்த 3 செயற்கைகோள் விரைவில் விண்ணில் ஏவப்படுகிறது.
தமிழில் பேசுவோம், தமிழை எழுதுவோம். தமிழை படிப்போம். படித்ததை புத்தகமாக எழுதுவோம். எம்.ஏ., வரை கோவையில் தாய் மொழியில் தான் படித்தேன். நான் தமிழில் எழுதிய புத்தகங்கள் தற்போது கன்னடத்தில் மொழி பெயர்க்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.

பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் பேசியதாவது:
புத்தக திருவிழாவிற்காக வரவில்லை. நமது தொப்புள் கொடி உறவுகளை காண வந்தேன். தமிழர்களை பார்த்து மகிழ வந்தேன். தமிழில் படித்து எப்படி ஐ.ஏ.எஸ்., ஆனீர்கள் என்று பலர் என்னிடம் கேட்டனர். தமிழில் படித்ததால் தான் உயர்ந்த நிலைக்கு வந்தேன் என்று பெருமையுடன் கூறுவேன்.
தமிழ் என்னுடைய முகம், என்னுடைய முகவர், என்னுடைய அடையாளம். தமிழ் தான் எல்லாமே. சம்பிரதாயமாக இந்த புத்தக திருவிழா இல்லாமல், இனி வரும் காலங்களிலும் நடத்தப்பட வேண்டும். இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுகொடுக்க வேண்டும்.
என் பிள்ளைகளுக்கும் நான் கற்றுகொடுக்கிறேன். மாணவர்களை தமிழ் மொழியில் படிக்க ஊக்குவிக்க வேண்டும். முதல் காதல், முதல் படிப்பு போன்று முதல் மொழியாம் தாய்மொழியை கற்றுகொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.

மாலையில் தமிழால் இணைவோம் என்ற தலைப்பில், எழுத்தாளர் அனிதா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிந்தனை உரை நிகழ்ச்சி நடந்தது.
புத்தக திருவிழாவில் தமிழகத்தின் பிரபல பதிப்பங்களின் 20 ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தன. தாமரை பதிப்பகத்தின் பல்வேறு தரப்பினர் புத்தகங்களை வாங்கி குவித்தனர். அந்துமணி எழுதிய பார்த்தது, கேட்டது, படித்தது என்ற புத்தகத்தை பலரும் ஆர்வத்துடன் வாங்கினர்.
முதல் நாள் புத்தக திருவிழா கோலாகலமாக துவங்கியது. அரிய புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைத்ததால், தமிழர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கினர். ஜனவரி 1ம் தேதி வரை நடப்பதால் தமிழர்கள் பலர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுகதை, புதினம், கட்டுரை, கவிதை மட்டுமே தமிழ் அல்ல. ஒவ்வொரு புத்தகமும், ஒரு இலக்கியம். புத்தகங்களை படித்தால் அறிவு வளரும். இது போன்று தமிழ் புத்தக திருவிழாவை நடத்துவது சிறப்பானதாகும்.
– தவமணி, முதுநிலை விஞ்ஞானி, பாபா அணு ஆராய்ச்சி கழகம்
திம்மையா சாலையில் தமிழ் பள்ளியை புதுப்பிக்கப்படுகிறது. திருவள்ளுவர் சிலை பூங்கா மேம்படுத்தப்படுகிறது. தமிழர்கள் பிரச்னை அறிந்து கொள்ளவே தமிழை கற்றுகொண்டேன். தமிழர்கள் எப்போது என்ன கேட்டாலும் செய்ய தயாராக இருக்கிறேன்.
–
ரிஸ்வான் ஹர்ஷத், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவாஜிநகர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்