புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு; பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் – அரசு உத்தரவு!

கர்நாடக மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான அண்டை நாடான சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றின் தீவிரப் பரவலுக்கு, ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று காரணம் என தெரிய வந்துள்ளது. இதே போல், அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

இதற்கிடையே, வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் அண்மையில் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பண்டிகை காலம் வர உள்ளதால் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளுக்கு அட்வைஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏற்கனவே, உள்ளூர் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளதைப் போல், பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர், உணவகங்கள், மதுபான விடுதி உள்ளிட்டவற்றிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படுகிறது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.

மேலும், நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகளால் பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.