பெங்களூரு: கர்நாடக சுரங்க தொழிலதிபரும், முன்னாள் அமைச்சருமான ஜி.ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
கர்நாடகாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவில் இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. மறைந்த பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் சீடரான ஜனார்த்தன ரெட்டி, பெல்லாரியில் பாஜகவை வளரச் செய்தவர். பெல்லாரியில் 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து சுஷ்மா ஸ்வராஜ் களமிறங்கினார். அப்போது சுஷ்மாவின் பிரச்சாரத்துக்கு ஆதரவாக நின்றார். தேர்தலில் சுஷ்மா தோல்வி கண்ட போதும், சுஷ்மா ஆதிக வாக்குகளைப் பெற ஜனார்த்தன ரெட்டிதான் காரணமாக இருந்தார்.
கர்நாடகாவில் கடந்த 2008 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அப்போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர் ஜனார்த்தன ரெட்டி.
இவர் கனிம சுரங்க தொழில் செய்து வருகிறார். பெல்லாரி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் சுரங்கங்களை நடத்தி வருகிறார். இதற்கிடையேதான் ஜனார்த்தன ரெட்டி மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக மாறினார். இதனிடையே அவர் மீது கனிம வள சுரங்க முறைகேடு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்தது, கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது புகார்கள் எழுந்தன. சிபிஐ இவர் மீது வழக்குப் பதிவு செய்து இவரை சிறையில் அடைத்தது. சிறையில் இருந்து விடுதலையான பின்னர் பாஜகவுடன் எந்தத் தொடர்பையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில், கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா என்ற கட்சியைத் நேற்று தொடங்கியுள்ளார் அவர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நான் பாஜகவில் உறுப்பினராக இல்லை என்றும், அந்தக் கட்சிக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் மாநில மக்கள் நான் இன்னும் பாஜகவில் இருப்பதாக நினைக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே புதிய கட்சியை தொடங்கியுள்ளேன்.
மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரித்தாளும் அரசியலுக்கு எதிரான பசவண்ணரின் சிந்தனையுடன், கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா கட்சியை அறிவிக்கிறேன். எங்கள் கட்சி 2023 பேரவைத் தேர்தலில் போட்டியிடும். விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்ப்பேன்.
நான் தொடங்கிய திட்டங்கள் என்றுமே தோல்வி கண்டதில்லை. தோல்வியை ஏற்றுக் கொள்ளாத சில நபர்களில் நானும் ஒருவன். மாநில மக்களின் ஆசியுடன் என் கட்சி வளர்ச்சி பெறும். எனது மனைவி, எனது அரசியல் பயணங்களுக்கு துணை நிற்பார்.அடுத்த 10, 15 நாட்களில் கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அறிவிப்பேன். அப்போது சில வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜனார்த்தன ரெட்டியின் மூத்த சகோதரர் கருணாகர ரெட்டி, ஹரப்பனஹள்ளி பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார். இவரது தம்பி பெல்லாரி ஊரகத் தொகுதியின் பாஜக பொறுப்பாளராக உள்ளார்.