ஜன. 9ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த மாதம் 9 ஆம் தேதி, ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்து உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:

ஜனவரி மாதம் 9 ஆம் தேதி காலை 10 மணியளவில், சட்டப்பேரவையை கூட்டவும், உரை நிகழ்த்தவும் ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்துள்ளார். அன்றைய தினமே அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்படும்.

இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கும்
சட்டமன்ற
உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். ஆளுநர் உரை முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படும். அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரலையில் ஒளிபரப்ப முயற்சி செய்து வருகிறேன். தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இடையே அமைச்சர் உதயநிதிக்கு இருக்கை வழங்கப்படும். துணை எதிர்க்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் 17 – 19 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.