சீனாவில் இருந்து ஆக்ரா திரும்பிய 40 வயதான நபருக்கு பிஎஃப் 7 புதிய வகை கொரோனா தொற்று உறுதி

ஆக்ரா: சீனாவில் இருந்து ஆக்ரா திரும்பிய 40 வயதான நபருக்கு பிஎஃப் 7 புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

இதேபோல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கடந்த 23-ம் தேதி சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவின் ஷாகஞ்ச் பகுதியை சேர்ந்த 40 வயதான நபர், சீனாவில் தங்கி பணிபுரிந்த நிலையில், விடுமுறையை ஒட்டி வீடு திரும்பியுள்ளார். கடந்த 23-ம் தேதி அன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அறிகுறி ஏதும் இல்லாவிட்டாலும் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருமாற்றம் பெற்ற கொரோனா என்பதை அறிந்து கொள்வதற்காக மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்காக அவரது மாதிரிகள் லக்னோவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.