20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. 2-வது ஆட்டம் புனேயிலும் (ஜன.5-ந்தேதி), 3-வது ஆட்டம் ராஜ்கோட்டிலும் (ஜன.7) நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் கவுகாத்தி (ஜன.10), கொல்கத்தா (ஜன.12) திருவனந்தபுரம் (ஜன.15) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அத்துடன் ஐ.பி.எல். ஏலத்தில் கோடிகளில் விலை போன இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷிவம் மாவி, முகேஷ்குமார் ஆகியோர் புதுமுக வீரர்களாக அழைக்கப்பட்டு உள்ளனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.