குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம்! சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க முடிவு!

புதுக்கோட்டை அருகே முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம், அந்த கிராமத்தில் உள்ள கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம், அதேபோல் அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தபட்ட சம்பவம் இவை குறித்து விசாரித்து தீர்வு காண்பதற்காக அந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூக மக்கள் உள்ளிட்ட மூன்று சமூக மக்கள் பிரதிநிதிகளுடனான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்  இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பிரதிநிதிகள் ஒரு தரப்பாகவும் இரண்டு மாற்று சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் மறுதரப்பாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டு இரண்டு தரப்புகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையாக நடைபெற்றது.

இந்த சமாதான கூட்டத்தில் இறையூர் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் உள்ளிட்ட மூன்று சமூகங்களை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகள் 26 பேர் பங்கேற்றனர். இதே போல் மாவட்ட ஆதிதிராவிடர் துறை நல அலுவலர் கருணாகரன் குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல் புதுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராகவி உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க மேல்நிலைத் தொட்டியில், அடையாளம் தெரியாத நபர்கள் மனித கழிவுகளை கலந்ததை மிகப்பெரிய குற்றமாக கருதி அது யாராக இருப்பினும் மேற்படிசெயலை செய்தவர்கள் மீது காவல்துரை மூலம் உடனடியாக விசாரணை மேற்கொள்வதோடு உரிய தண்டனை பெற்றுத்தர இருதரப்பினராலும் கூட்டத்தில் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் வேங்கைவயல் கிராமத்தில் ஊர் பொது கோயிலாக அமைந்துள்ள அய்யனார் கோயிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக தினந்தோறும் காலை மற்றும் மாலை என இருநோங்களிலும் கோயில் மூலஸ்தனம் கதவு திறக்கப்படும் போது மின்சார ட்ரம்செட் ஒலிக்கப்பட்டும். அப்போது இருதரப்பினரும் சாமி கும்பிடுவதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும், தங்கள் கிராமத்தில் உள்ள அணைத்து சாதி, மதத்தினரும் ஒற்றுமையுடன் இருப்பதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதோடு திருவிழா, திருமணம் போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிப்பு செய்து கோயிலில் அனைவரும் ஒற்றுமையாக சாமிகும்பிட வேண்டுமென இருதரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

 மேலும் அக்கிராமத்தில் உள்ள தேநீர் கடையில் இரு குவளை முறை இன்றி கிராமத்தில் அனைவரும்
எவ்வித வேறுபாடு இன்றி அனைவரும் சுமூகமாக, சமமாக வாழும் நிலையை உறுதி என எடுக்கப்பட்ட முடிவுக்கு இரண்டு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

மேலும் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு  மயானசாலை அமைப்பது, வீடு வழங்குவது போன்ற அடிப்படை
வசதிகளுக்கு உரிய கருத்துக்கள் அனுப்பப்பட்டதாக அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் உறுதி அளிக்கப்பட்டது.
 கூட்டத்தின் நிறைவாக பல்வேறு சமுதாய மக்கள் ஒன்றுகூடி கிராமத்தில் எவ்வித சாதி, சமய
வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பாக கிராம பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஏகமனதாக அந்த கூட்டத்தில் பங்கேற்ற மூன்று சமூகங்களை சேர்ந்த  இரு தரப்பு  பிரதிநிதிகளும் சம்மதம் தெரிவித்தனர். அதற்கு எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தையும் அவர்கள் அளித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.