
பொங்கல் பரிசுத் தொகுப்பை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர்ந்து வழங்க ரேஷன் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பொங்கல் பரிசு, ரொக்கத்தை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களையே சாரும்.

சென்னையில், உணவுப்பொருள் வழங்கல் வடக்கு, தெற்கு துணை ஆணையருக்கு முழு பொறுப்பு உண்டு. பொங்கல் பரிசு விநியோகத்தை முதல்வர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கி வைத்த பிறகு, அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பணி தொடங்கப்பட வேண்டும்.
பரிசுத் தொகுப்பை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர்ந்து வழங்கவேண்டும். இதற்காக, நியாயவிலைக் கடைகளுக்கு ஜனவரி 13-ம் தேதி பணி நாளாகும். அதற்கு பதில் ஜனவரி 27-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.

கடைகளில் அரிசி, சர்க்கரை, கரும்பு உரிய தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும். நாள், நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்க வேண்டும். கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல் துறை உதவியை பெற வேண்டும்.
விற்பனை முனைய இயந்திரம் மூலம் கைரேகை சரிபார்ப்பு முறைப்படி பொங்கல் பரிசுத் தொகுப்பைவழங்க வேண்டும். அங்கீகாரச் சான்று வழங்கியதன் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம் பதிவேட்டில் கையொப்பம் பெற்று பொருட்களை விநியோகிக்கலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.