இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. அதனால், அரசு விடுமுறை நாட்களுடன் பொங்கல் விடுமுறையும் இணைந்து நான்கு நாட்கள் வருவதால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், 4 மாதங்களுக்கு முன்பே ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மூன்று நாட்களுக்கு முன்பே பயணத்தை தொடங்குவர். இதற்காக சென்னையில் இருந்து செல்லக்கூடிய வழக்கமான ரெயில்கள் மட்டுமல்லாமல் சிறப்பு ரெயில்களிலும் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன.
இதையடுத்து ஆம்னி பேருந்துகளிலும் பல மடங்கு கட்டணம் இருப்பதால் ஏழை மக்கள் அரசு பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ளனர். இதனால், அரசு சார்பில் பொங்கலை முன்னிட்டு வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதன் படி, இந்த ஆண்டும் சென்னையில் இருந்து 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற ஊர்களில் இருந்து 6,182 சிறப்பு பஸ்கள் என்று மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு கடந்த மாதம் 12-ந்தேதி முதல் தொடங்கியது. பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதில், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளுக்கும், தேனி, திண்டுக்கல், கும்பகோணம், தஞ்சாவூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகளிலும் பெரும்பாலான இருக்கைகள் நிரம்பி விட்டன. 13 மற்றும் 14 உள்ளிட்ட தேதிகளில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அதற்கு முந்தைய நாளான 12-ந்தேதிக்கு பயணத்தை மாற்றி வருகின்றனர்.
சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்ததாவது:- சென்னையில் இருந்து இரவில் இயக்கக் கூடிய முன்னூறு விரைவு பேருந்துகளிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.
விரைவு பேருந்துகளில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி வருவதால் மற்ற போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் முன்பதிவு விரைவில் தொடங்கப்படும். பொதுமக்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்ப்பதற்கு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.